ரெட்டவயல் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர கோரிக்கை

டிச.29-- தஞ்சை மாவட்டம் ரெட்டவயல் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து, ரெட்டவயல் கிராம பொதுமக்கள் மற்றும் திமுக கிளைக் கழகம் சார்பில், பொதுமக்கள் கையெழுத்திட்டு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமாரிடம் நேரில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, 
"தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், ரெட்டவயல் ஊராட்சி சுற்றுவட்டாரத்தில், மணக்காடு, 
ருத்ரசிந்தாமணி, கொளக்குடி, விளங்குளம், முதுகாடு ஊராட்சி ஆகியவை உள்ளது. 

இதில் 6 ஊராட்சிகளில், சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த 50 கிராம மக்களும் தங்களுக்கு உடல்நலை பாதிப்பு ஏற்பட்டால், ஊமத்தநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. 

ஊமத்தநாடு செல்வதற்கு இடையே காட்டாறு உள்ளதால், பூக்கொல்லை சென்று 15 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. எனவே, பெருமகளூர் ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்து சில கிராமங்களையும், ஊமத்தநாடு ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து சில கிராமங்களையும் ஒன்றிணைத்து, ரெட்டவயல் பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறோம். 

ரெட்டவயல் செல்வதற்கு பேருந்து வசதி அமைந்து  சிறந்த மையமாக உள்ளது. மேலும், அன்றாட பல்வேறு பணிகளுக்காக, சுற்றுவட்டார கிராம மக்கள், ரெட்டவயல் கடை வீதிக்கு வந்து செல்வதும் வழக்கம். எனவே, இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தந்தால் பெரும்பாலான மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات