ஹிஜாப்பிற்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? TNTJ சரமாரி கேள்வி

கர்நாடகாவில் கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாகத் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் முதலில் சில பியு கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் அப்படியே வேறு சில மாவட்டங்களுக்கும் பரவியது. கல்லூரி நிர்வாகங்களின் இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லீம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். ஹிஜாப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கல்லூரிகளிலேயே போராட்டம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து முஸ்லீம் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று தெரிவித்தனர். மேலும், ஹிஜாப் என்பது இஸ்லாமியச் சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இது தொடர்பாகத் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் சென்னை மண்ணடியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் கரீம், 'இஸ்லாத்தைப் பற்றி அறியாமல் இஸ்லாமியப் பெண்கள் பள்ளி கல்லூரிகளுக்கு புர்கா, ஹிஜாப் அணிந்து செல்லக்கூடாது என்று நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் குரானில் அத்தியாயம் 33 வசனம் 59-ல் பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காகத் தலையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை நீதிபதிகளிடம் சுட்டிக் காட்டிய பிறகும் நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

பள்ளியில் சீருடையை மறுக்கவில்லை, சீருடை அணிய மாணவிகள் தயங்கவில்லை, அதோடு சேர்ந்து தலையில் ஹிஜாப் அணிய மட்டும் தான் அனுமதி கேட்கிறார்கள். அதையும் இந்த பாஜக அரசு மறுக்கிறது. பிற மதத்தைச் சார்ந்தவர்கள் மாலை, பூணூல், காவி ஆடை அணிந்து வருவதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து வர மட்டும் ஏன் தடை விதிக்கப்படுவது ஏன். சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்கு உரிய இடம் நீதிமன்றம் தான், ஆனால் அந்த நம்பிக்கையை உடைக்கும் விதமாக இந்த தீர்ப்பு உள்ளது. இதற்கு பாஜக தான் முழு காரணம். ஓவைசி போன்ற சில அமைப்புகள் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிராகச் செயல்படுகின்றன. மேலும் தமிழகத்தில் பாஜகவில் இருக்கும் சில இஸ்லாமியர்கள் பெயரளவில் மட்டுமே இஸ்லாமியர்களாக உள்ளார்கள். அவர்கள் இஸ்லாத்தில் கூறப்பட்டிருக்கும் வழிகளைக் கடைப்பிடிக்காத போது அவர்கள் இஸ்லாமியர்களாக இருக்க முடியாது.

நீதிமன்றத்தின் மூலம் ஏமாற்றி பாபர் மசூதியைப் பெற்றுக்கொண்டார்கள். மேலும் முத்தலாக் சட்டம், சி.ஏ.ஏ சட்டம் என்று தொடர்ந்து இன்று ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமியர்களிடையே மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தும். இது தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்' என்றும் அவர் தெரிவித்தார்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات