சுப்பம்மாள்சத்திரத்தில் சிறுபான்மை மீனவ மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிபிஎம் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், திருவத்தேவன் ஊராட்சி, சுப்பம்மாள்சத்திரம் கிராமம் சிறுபான்மை மீனவ மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சுப்பம்மாள்சத்திரம் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை காலை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.தயார் சுல்தான் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட மீனவர் சங்கத் தலைவர் கே.குத்புதீன், சிபிஎம் கிளைச் செயலாளர் எம்.நிஜார், கிராம அம்பலம் என்.காஜாமைதீன், கிராமத் தலைவர் கே.முகமது அனீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் சிறப்புரையாற்றினார். 

"சுப்பம்மாள் சத்திரம் மீனவர் கூட்டுறவு சங்கத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கடற்கரை மீன்பிடி படகுகள் நிறுத்தத்தை தூர்வாரி, ஆழப்படுத்தி சீர் செய்ய வேண்டும். கடற்கரைச் சாலையை துறைமுகம் வரை சரி செய்ய வேண்டும். 

கடற்கரை சாலையில் தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும். நீண்ட காலமாக சுத்தம் செய்யப்படாமல் உள்ள, மேல்நிலை நேர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்து, சுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். 

சுப்பம்மாள் சத்திரம் மயானத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பி, தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். சுப்பம்மாள் சத்திரம் குடியிருப்புகளில், 
மண் சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றித் தர வேண்டும். சுனாமி வீடு பயனாளிகள் முத்தலிபு, நாகூர் பிச்சை இருவருக்கும் வீடு கட்டித் தராமல் விடுபட்டதால், வீடு கட்டும் திட்டங்களில் முன்னுரிமை அளித்து வீடு வழங்க வேண்டும். 

மாவட்ட ஆட்சி தலைவரால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட சுப்பம்மாள் சத்திரம் பயனாளிகளுக்கு, குறிப்பிட்ட இடத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும்" என காத்திருப்பு போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த மீன்வளத்துறை அலுவலர், சுப்பம்மாள்சத்திரம் மீனவர் கூட்டுறவு சங்கம் ஒரு வார காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என உறுதி அளித்தார். மேலும், பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிரிதிவிராஜ் செளஹான் அழைப்பின் பேரில் பட்டுக்கோட்டையில், அதிகாரிகளுடன் மாலை சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

செய்தி : முனைவர் வேத கரம்சந்த்காந்தி (செய்தியாளர்)
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات