500 கிலோ கஞ்சாவை காணோம்.. எலி தின்னுடுச்சு.. நீதிமன்றத்தில் உ.பி காவல்துறை தகவல்

போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டுவிட்டதாக போலீஸார் கொடுத்த அறிக்கையை பார்த்து நீதிமன்றமே சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்து போன சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

ஏதோ அரிசி, பருப்பை எலி சாப்பிட்டுவிட்டது என்பது போல கஞ்சாவை சாப்பிட்டுவிட்டது என காவல்துறை கூறிய பதிலை கேட்டு கடுப்பான நீதிபதி, "என்ன பாத்தா லூசு மாதிரி தெரியுதா" என்ற ரீதியில் போலீஸாருக்கு செம டோஸ் விட்டிருக்கிறார். மேலும், மாயமாகி போன கஞ்சாவை இன்னும் ஒரு வாரத்துக்குள் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவில்லை என்றால் நடப்பதே வேறு எனவும் போலீஸாரை திட்டி தீர்த்திருக்கிறார் நீதிபதி. 

உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா நகரம் போதைப்பொருள் கடத்தலுக்கு பெயர்போன பகுதி ஆகும். பல போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இங்கு செயல்பட்டு வருவதால் உத்தரபிரதேசம் முழுவதும் இங்கிருந்து கஞ்சா, அபின், கொக்கைன் போன்ற போதைப்பொருட்கள் சப்ளை ஆகி வருகின்றன. இதனிடையே, கடந்த 2018-ம் ஆண்டு அங்கு போதைப்பொருள் கடத்தலை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டன. இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை மதுரா போதைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்ததால், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை சாட்சிக்காக நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு கடந்த வாரம் நீதிபதி உத்தரவிட்டார். இதன்பேரில், போலீஸாரும் அந்த கஞ்சா மூட்டைகளை நீதிமன்றத்துக்கு நேற்று கொண்டு வந்தனர். இதையடுத்து, அவற்றை எடைப்போட்ட போது வெறும் 200 கிலோ கஞ்சா மட்டுமே இருந்துள்ளது. 

இதை பார்த்த நீதிபதி, '700 கிலோ கஞ்சா எனக் கூறினீர்கள். இப்போது என்ன வெறும் 200 கிலோ தான் இருக்கிறது..' என நீதிபதி கேள்வியெழுப்பினார். திடீரென நீதிபதி இப்படி கேட்டதால் என்ன சொல்வதென்று தெரியாமல் போலீஸார் திருதிருவென முழித்தனர். அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சட்டென, '500 கிலோ கஞ்சாவை எலி தின்றுவிட்டது' என்று கூறினார். இதை கேட்ட நீதிபதியும், மற்றவர்களும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். 'என்னது.. 500 கிலோ கஞ்சாவை எலி தின்றுவிட்டதா..'

இதை கேட்டு கடுப்பான நீதிபதி, 'இந்தக் கதையை எல்லாம் வேறு எங்கேயாவது போய் சொல்லுங்கள். இன்னும் ஒரு வாரத்துக்குள் காணாமல் போன கஞ்சா மூட்டைகள் நீதிமன்றத்துக்கு வர வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு' எனக் கூறினார்.

ஏற்கனவே, இப்படித்தான் பீகாரில் கோட்வாலி தேஹத் காவல்நிலையத்தில் 2021ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்பிலான 1,400 பெட்டி மதுபானங்களையும் எலிகள் குடித்துவிட்டதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.  தற்போதும் இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, காவல்நிலைய அதிகாரி மற்றும் தலைமை கிளெர்க் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை இவர்கள் ரௌடி கும்பல் ஒன்றுக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات