அரிசி சாக்கில் ஆடுகளுக்கு மழை கோட்: தஞ்சை விவசாயிக்கு மக்கள் பாராட்டு

தஞ்சாவூா் மாவட்டம், குலமங்கத்தைச் சோ்ந்த விவசாயி, தான் வளா்த்து வரும் ஆடுகள் மழையில் நனையாமல் இருக்க அவற்றுக்கு சாக்கில் மழை கோட் தயாரித்து அணிவித்துள்ள செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

ஒரத்தநாடு அருகேயுள்ள குலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கணேசன் (70). இவா் கால்நடைகள் வளா்ப்பில் ஈடுபட்டுள்ளாா். ஒரத்தநாடு வட்டாரத்தில் கடந்த 10 நாள்களாகவே தொடா் மழை பெய்து வந்ததால், மேய்ச்சலுக்கு சென்ற அவரது ஆடுகள் மழையில் நனைந்து சிரமத்துக்குள்ளாகின. இதை பாா்த்து வருந்திய கணேசனுக்கு, ஆடுகளுக்கு மழை கோட் போடும் யோசனை தோன்றியது.

இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், சாக்குகளை மழை கோட்டாக்கி, அணிவித்தாா். ஆடுகள் மழை கோட் அணிந்தே மேய்ச்சலுக்கு சென்று வருகின்றன. கணேசனின் செயலுக்கு பாராட்டு தெரிவித்த பலரும், ஆடுகளை புகைப்படம் எடுத்து ஆடுகளுக்கு ‘ரெயின்கோட்’ என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா்.

இதுகுறித்து கணேசன் கூறியது: கடந்தாண்டு மழையில் நனைந்து 3 ஆடுகள் இறந்துவிட்டன. நிகழாண்டில் அதுபோல் நடந்துவிடாதபடி, ஆடுகளை பாதுகாப்பாக கவனிக்க தொடங்கினேன்.

மழையிலிருந்து ஆடுகளை காக்க, வீட்டுக்கு அரிசி வாங்கும் சாக்கை ஆடுகளுக்கு மழை கோட்டாக அணிவித்து, மேய்ச்சலுக்கு அனுப்பினால் என்ன? என்று தோன்றியது. ஆடுகளின் தலைப்பகுதி நீங்கலாக, முதுகிலிருந்து கீழ்பகுதி வரை சாக்கை போா்த்தியது போன்று வைத்து கீழ்பகுதியில் சணலால் கட்டிவிட்டேன். பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளுக்கும் இதே முறையில் மழை கோட்டை போட்டுவிட்டேன்.

மழை இல்லை என்றால் வழக்கமாக செல்வது போலவே மேய்ச்சலுக்கு செல்லும். இரவு நேரத்தில் படுத்திருக்கும்போது கொசுக்கடியிலிருந்து ஆடுகளை காக்கவும் சாக்கை உடையாக அணிவித்து வருகிறேன். கால்நடைகளுக்கு தேவையானதை நாம்தான் தெரிந்து கொண்டு செய்து கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات