3 முஸ்லிம்களை கொன்ற RPF வீரர் - மோடி, யோகிக்கு வாக்களிக்க மிரட்டல்

ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர் தனது உயரதிகாரி மற்றும் 3 முஸ்லிம் பயணிகளை சுட்டுக்கொன்றவுடன், இந்தியாவில் நீங்கள் வாழ வேண்டும் என்றால் மோடிக்கும் யோகிக்கும் வாக்களிக்க வேண்டும் என மற்ற ரயில் பயணிகளிடம் மிரட்டிய பகீர் வீடியோ வெளியாகியுள்ளது.

நேற்று காலை ஜெய்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்றுகொண்டு இருந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரரான சேத்தன் சிங், ரயில்வே பாதுகாப்பு படையில் தனது உயரதிகாரியான எஸ்.ஐ.டீக்காராம் மீனாவையையும், 3 ரயில் பயணிகளை சரமாரியாக சுட்டுக் கொலை செய்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை ரயில் நிலையம் வந்தடைவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக வைதர்னா என்ற ரயில் நிலையத்தை தாண்டி பால்கர் என்ற பகுதிக்கு அருகே இந்த துப்பாக்கிச் சூட்டை அவர் நிகழ்ச்சி உள்ளார். அதிகாலை 5 மணிக்கு நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிறது.

ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ. டீக்காராம் மீனாவை சுட்டுக் கொன்றபின் பி5 என்ற பெட்டியில் உள்ள ஒரு பயணியை சுட்டுக் கொலை செய்துள்ளார் சேட்டன் சிங். அதே வெறியுடன் பி6 என்ற பெட்டிக்கு சென்று அங்குள்ள ஒருவரையும் அவர் கொடூரமாக கொன்று உள்ளார். அதன் பின்னர் பி5 மற்றும் பி6 பெட்டிகளுக்கு இடையே இருக்கும் பேண்ட்ரி காரில் உள்ள ஒருவரையும் சேட்டன் சிங் சுட்டுக்கொலை செய்து உள்ளார்.

சேட்டன் சிங்கால் கொல்லப்பட்ட மேலும் 3 பயணிகளும் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். காதிர்பார் முஹம்மது ஹுசைன் பன்புர்வாலா (48), அக்தர் அப்பாஸ் அலி (48), சதார் முஹம்மது ஹுசைன் ஆகிய 3 ரயில் பயணிகள் ரயில்வே பாதுகாப்பு படை வீரரால் கொல்லப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

அதன் பின்னர் தஹிசார் என்ற பகுதி அருகே ரயில் உள்ள அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தி சேத்தன் சிங் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்று உள்ளார். அப்போது அவரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்து உள்ளார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸை சேர்ந்த சேத்தன் சிங்குடன் மேலும் 2 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் சேத்தன் சிங் ஒருவரை ரயிலில் சுட்டுக் கொலை செய்த பின்னர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரத்த வெல்லத்தில் கொல்லப்பட்ட பயணி கீழே விழுந்து கிடந்த நிலையில், சேத்தன் சிங் துப்பாக்கியை காட்டி அங்கிருந்த மற்ற பயணிகளை மிரட்டுகிறார்.

பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்களைதான் நான் கொலை செய்தேன். இந்தியாவில் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மோடிக்கும் யோகிக்கும் வாக்களிக்க வேண்டும்." என்று அந்த சேட்டன் சிங் பேசுகிறார். இதனை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ நரேஷ் பல்யான் ட்விட்டரில் பகிர்ந்து, "ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கூட இதுபோன்ற அக்கிரமம் நடக்கவில்லை. அரசு அதிகாரிகள் மத்தியில் பாஜக அரசு விஷத்தை பரப்பி உள்ளது." என்று விமர்சித்துள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்