குஜராத், ஹிமாச்சலில் வெல்லப் போவது யார்? பெரும் எதிர்பார்ப்புகளிடையே நாளை வாக்கு எண்ணிக்கை

டெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதையொட்டி இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஹிமாச்சல பிரதேசத்தில் 68 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 9-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் 74.61% வாக்குகள் பதிவாகி இருந்தன.

குஜராத்தில் கடந்த 9, 14 -ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக 182 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இரு கட்ட தேர்தல்களிலும் மொத்தம் 68.41% வாக்குகள் பதிவாகின.

பலத்த பாதுகாப்பு

இந்த இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதையடுத்து இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்து கணிப்புகள்

குஜராத்தில் 22 ஆண்டுகாலம் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. இம்முறையும் பாஜகவே ஆட்சியைக் கைப்பற்றும் என அனைத்து தேர்தல் கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இருந்தபோதும் களநிலவரம் காங்கிரஸுக்கு சாதகமாக மாறலாம் என்கிற கருத்தும் உள்ளது.

குஜராத்தில் பாஜகவுக்கு எதிர்ப்பு
குஜராத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் முழு வீச்சில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி மசோதா விவகாரம் ஆகியவற்றுடன் பாஜகவின் வாக்கு வங்கிகளாக இருந்த சமூகத்தினரின் கடுமையான வெளிப்படையான அதிருப்தி ஆகியவை குஜராத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்