சவுதி அரேபியாவில் முதல் முறையாக நடந்த பெண்கள் மராத்தான் ஓட்டப்பந்தயம்!


மனாமா:
சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு அண்மையில்தான் அனுமதி கிடைத்தது. இதேபோல், விளையாட்டுப் போட்டிகளை பார்வையிடுவதிலும் அந்நாட்டு பெண்களுக்கு அண்மையில்தான் சுதந்திரம் கிடைத்தது. இந்நிலையில், இதில் மேலும் ஒரு படி முன்னேற்றமாக கடந்த ஞாயிறன்று மனாமா பகுதியில் பெண்கள் மட்டும் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
2 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் குடும்பத்தில் அனுமதி கிடைக்காமல் 500 பெண்கள் இதில் பங்கேற்கவில்லை. மீதமுள்ள ஆயிரத்து 500 பெண்களும் அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். இதில் மிஸ்னா அல் நாசர் என்ற சவுதிப் பெண், முதல் பரிசை வென்றார். இதற்கு தமது குடும்பத்தினர் தமக்களித்த சுதந்திரமும், பெண்கள் முன்னேற வேண்டும் என்ற உத்வேகமுமே காரணம் என அவர் விளக்கம் அளித்துள்ளார். மாரத்தான் போட்டியில் பங்கேற்ற சவுதி அரேபிய பெண்கள் பெரும்பாலானோர் பாரம்பரிய உடையுடன் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.