ரிலையன்ஸ் ஜியோ தொடர்பாக மெசேஜ் வருகிறதா..?உஷார் மக்களே உஷார்..!


உங்களுக்கு ஏதாவது ரிலையன்ஸ் ஜியோ தொடர்பாக மெசேஜ் வருகிறதா..? குறிப்பாக 399 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் அதுவும் மூன்று மாத காலங்களுக்கு வேலிடிட்டி உண்டு என்று ஏதாவது மெசேஜ் வருகிறதா..?இது போன்ற குறுஞ்செய்திகள் மின்னஞ்சல்கள் மற்றும் யூட்யூப் வீடியோக்களுக்கு பலியாகி விட வேண்டாம் என எச்சரிக்கிறது பல செய்திகள். ஏன்..?

இந்த மெஸேஜ் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதில் அளித்தால் என்ன ஆகும் என்று கேட்கிறீர்களா..?
வழக்கம் போல நீங்கள் இந்த மெசேஜ் மற்றும் மின்னஞ்சல்கள் அல்லது யூடியுப் வீடியோக்களில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்குகளுக்குச் சென்றால் நம்முடைய தரவுகளை ஒவ்வொன்றாக கேட்கும். குறிப்பாக நம்முடைய பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் போன்றவைகளை எல்லாம் கேட்கும். அதற்குப் பின் வழக்கம் போல இந்த செய்தியை 10 வாட்ஸ்அப் குழுக்களுக்கு பகிரச் சொல்லி நமக்கு உத்தரவு போடும் நாமும் அதை நம்பி நம்முடைய நண்பர்கள் குழு மற்றும் அலுவலக குழுவிற்கு இந்த செய்தியை பரப்புவோம்.


பிரச்னைகள்:
 
இதனால் நமக்கு இரண்டு விதத்தில் பிரச்சனைகள் ஏற்படும் ஒன்று நம்முடைய சொந்த தகவல்களை நாமே முன்வந்து ஒரு நிறுவனத்திற்கு கொடுப்பது போல் ஆகிவிடும். இந்த தரவுகளை டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விற்று விடுவார்கள். இந்த டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் தான் நம்மை தொடர்ந்து கிரெடிட் கார்டு வாங்கச் சொல்வது தனிநபர் கடன் வாங்க சொல்வது அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளை வாங்க சொல்வது, பங்குச் சந்தையில் முதலீடு செய்யச் சொல்வது என நம்மை தொடர்ந்து தொந்தரவு செய்வார்கள்.

வங்கிக் கணக்கு :
இரண்டாவதாக இந்த தரவுகளை வைத்து அவர்களால் நம்முடைய வங்கிக் கணக்குகளை கூட ஹேக் செய்து நம் வங்கிக் கணக்கு பணத்தை திருட முடியும். வங்கிக் கணக்கு எனச் சொல்வதில் நம்முடைய கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் போன்றவைகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து ஜியோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலை தளங்களில் தேடிய போது அப்படி எந்த ஒரு ஆதாரங்களும் கண்ணில் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இனி இது போன்ற செய்திகளை மின்னஞ்சலில் அல்லது யூட்யூப் வீடியோக்கள் உங்களுக்கு வந்தால் அதைத் தவிர்த்து விட்டு அடுத்த வேலையை பார்க்கச் செல்வது சாலச் சிறந்தது. அதையும் மீறி உங்களுக்கு அந்த செய்தி உண்மை போல் தோன்றினால் ஜியோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலை தளத்திற்கு சென்று ஒன்றுக்கு இரண்டு முறை விவரங்களை தெரிந்து கொள்வது நல்லது.