4 மணிநேரத்தில் 366 கிலோமீட்டர் தூரம் பயணம் - தமுமுக ஆம்புலன்சின் பரபர நிமிடங்கள்!


ராமநாதபுரம் சிறுவனின் உயிரைக் காப்பாற்ற 4 மணி நேரத்தில் 366 கிலோமீட்டர் பயணித்த தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

இராமநாதபுரம் மாவட்டம், அழகன் குளம் கிராமத்தைச் சேர்ந்த நயினார் முகமது என்பவரது மகன் முகமது அமீருல், வயது 13. இவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென இடதுகால் செயலிழந்ததோடு தண்டுவடத்திலும் கடுமையான வலி ஏற்பட்டது. அதனால் அந்தச் சிறுவனின் பெற்றோர் அவரை மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், அமீரை வீட்டுக்கு அனுப்பிவிட்டது மருத்துவமனை நிர்வாகம். தொடர்ந்து அவர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அமீரை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் முதுகுத் தண்டுவடம் முழுவதும் செயலிழந்துவிட வாய்ப்புகள் அதிகம் என்றும், அதனால் அடுத்த 6 மணி நேரத்திற்குள் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தால் மட்டுமே அதிலிருந்து அவரை மீட்க முடியும் என்றும் அமீரின் பெற்றோரிடம் கூறினர்.
இராமநாதபுரம் – புதுச்சேரிக்கு இடையேயான 366 கிலோமீட்டரை 6 மணி நேரத்தில் எப்படிக் கடக்க முடியும் என்று அமீரின் பெற்றோர்கள் தவித்த நேரத்தில் களமிறங்கியது, த.மு.மு.க ஆம்புலன்ஸ். 


இராமநாதபுரம், புதுச்சேரிக்கு இடையில் இருக்கும் அனைத்து ஊர்களின் த.மு.மு.க ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.
உடனே, அனைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் அந்தந்தப் பகுதிகளின் காவல்துறையினரிடம் தகவலைத் தெரிவித்து உதவி கேட்டனர். காவல்துறையினரும் உடனடியாகக் களமிறங்க, அவர்களுடன் பல்வேறு சமூக அமைப்புக்களும் இளைஞர்களும் கைகோத்தனர். மாலை சரியாக 6.20 மணிக்கு சிறுவன் அமீரை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்ட ஓட்டுநர் முகமது இஜாஸ், புதுச்சேரி நோக்கி கிளம்பினார்.
ஆம்புலன்ஸ் கிளம்பிய நேரம், கடக்கும் ஊர் போன்ற தகவல்கள் உடனுக்குடன் வாட்ஸ்-அப் ஆடியோ மூலம் அனைத்து ஊர்களிலும் இருக்கும் த.மு.மு.க ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைக்கொண்டு காவல்துறையினரின் உதவியுடன் போக்குவரத்தைக் கண்காணித்து வழி ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஊரையும் கடக்கும்போது, அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ்கள் முன்னும், பின்னும் சென்று வழியை ஏற்படுத்திய தருணங்கள் நெகிழ்ச்சியானது.
போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த சில இடங்களில், பொதுமக்களும் இளைஞர்களும் தாங்களாகவே மனிதச் சங்கிலி அமைத்து போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன் பயனாக இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களை தடையின்றி கடந்து, புதுச்சேரியை நோக்கி சீறிச் சென்ற ஆம்புலன்ஸ், இரவு 10.15 மணிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையைச் சென்றடைந்தது. சுமார் 8 மணி நேரம் கடந்திருக்கவேண்டிய தூரத்தை வெறும் 4 மணி நேரத்தில் கடப்பதற்கு கைகோத்த அனைவருக்கும் பாராட்டுகள் குவிகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்