கோட்டைப்பட்டினம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்த சம்பவம் - 6 மீனவர்கள் மீட்பு; 4 மீனவர்களை தேடும் பணி தீவிரம்!


ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த 2 - ந் தேதி புதிய படகு வாங்குவதற்காக கடலூருக்கு சென்றனர்.

அங்கிருந்து புதியரக நாட்டுப்படகு ஒன்றை வாங்கிக்கொண்டு , கடந்த 3 -ந் தேதி கடல் வழியாக ராமேசுவரத்துக்கு படகில் திரும்பி வந்து கொண்டிருந்தனர் . அந்த படகில் ராமேசுவரத்தை சேர்ந்த முனியசாமி , ரஞ்சித்குமார் , மதன் , இலங்கேஸ்வரன் , தரக்குடியான் , காந்திகுமார் , செந்தில்குமார் , முனீஸ்வரன் , உமாகாந்த் , காளிதாஸ் ஆகிய 10 பேர் பயணம் செய்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே நடுக்கடலில் படகு திடீரென கவிழ்ந்தது . இதனால் 10 மீனவர்களும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர் . இதில் செந்தில்குமார் , காளிதாஸ் ஆகிய 2 மீனவர்களும் பிளாஸ்டிக் கேனை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் மிதந்துள்ளனர் . அவர்களை மல்லிப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.

படகு கவிழ்ந்த அன்று மாலை 6 மணி வரை 10 பேரும் ஒன்றாக பிளாஸ்டிக் கேனை பிடித்தபடி நீந்தி வந்ததாகவும் , அதன் பிறகு காற்றின் வேகத்தால் மற்றவர்கள்  திசைமாறி மாயமாகி விட்டதாகவும் மீட்கப்பட்ட மீனவர்கள் கடலோர காவல் படையினரிடம் கூறினர்.

இந்த நிலையில் கவிழ்ந்த படகின் உடைந்த பாகங்கள் கோடியக்கரை கடல் பகுதியில் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் - மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் ராமேசுவரம் , நடராஜபுரம் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்க செயலாளர் அமுதன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் , கடலோர காவல் படையினர் என 19 பேர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முனீஸ்வரன் ( வயது 24 ) , தரக்குடியான் ( 25 ) , முனியசாமி ( 47 ) , ரஞ்சித்குமார் ( 23 ) ஆகிய 4 பேரும் மீட்கப்பட்டனர் அவர்கள் அனைவரும் உடனடியாக 108 ஆம்புலன்சு மூலமாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 மீதமுள்ள 4 பேரை தேடும் பணி நேற்று ஹெலிகாப்டர் உதவியுடன் நடைபெற்றது. இன்று மீண்டும் தேடும் பணியில் அதிகாரிகளும் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அவர்களுடைய உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது,.

கருத்துரையிடுக

0 கருத்துகள்