ஆதார் போன்று தமிழகத்தில் வசிக்கும் அனைவருக்கும் ‘மக்கள் ஐடி’

இந்தியாவில் ஆதார் கார்டு எப்படியோ அது போல் தமிழகத்தில் வாழும் மக்களுக்கு "மக்கள் ஐடி" என்ற பெயரில் 10 முதல் 12 இலக்க எண் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் சார்ந்த அனைத்து தரவுகளையும் சம்பந்தப்பட்ட துறைகளால் சேமித்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. பொது விநியோக துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பொது மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் பல்வேறு துறைகள் தனித் தனியாக தரவுகளை சேமித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் தரவுகளைக் கொண்டு ஒருங்கிணைப்பு மாநில குடும்பத் தரவு தளத்தை தயார் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பணியை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை செய்யவுள்ளது. இதில் அனைத்து துறைகளின் தரவுகளையும் ஒருங்கிணைந்து இந்தத் தரவு தளம் உருவாக்கப்படவுள்ளது.

இதன்படி பொது விநியோகம், முதல்வர் காப்பீட்டு திட்டம், வருவாய், கல்வி, முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், கருவூலம், சுகாதாரம் பல்வேறு துறைகளிடம் உள்ள தரவுகளை ஒருங்கிணைந்த இந்தத் தரவுத் தளம் உருவாக்கப்படவுள்ளது. குறிப்பாக, இதில் ஆதார் எண் போல் ஒவ்வொரு குடிமக்களுக்கும் ‘மக்கள் ஐடி’ என்ற பெயரில் 10 முதல் 12 இலக்க எண் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு குடிமக்களுக்கும் தனித்துவமான மக்கள் ஐடி வழங்கப்படும். இது 10 முதல் 12 இலக்க எண்கள் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் அனைத்து சேவைகளையும் இந்த ஒரு எண் மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தரவுத் தளம் தயார் செய்வதற்கான டெண்டரை மின் ஆளுமை முகமை கோரியுள்ளது. இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்டவுடன் இதற்கான பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்