ராமேஸ்வரம் அருகே இறந்து கரை ஒதுங்கிய அரிய வகை கடற்பசு

ராமேஸ்வரம் அருகே அரிய வகை கடற்பசு இன்று காலை இறந்தநிலையில் கரை ஒதுங்கியது.

மன்னார் வளைகுடா, பாக் ஜல சந்தி ஆகிய 2 கடற்பகுதிகளை உள்ளடக்கி ராமநாதபுரம் மாவட்டம், தமிழகத்தின் நீண்ட கடல் எல்லை மாவட்டமாக உள்ளது. இதில், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடற்குதிரை, கடற்பசு, கடல் ஆமை, கடல் அட்டை பவளப்பாறைகள், மெல்லுடலிகள் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இப்பகுதி மத்திய சுற்றுச்சூழல் வன அமைச்சகத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையின் கீழ் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். 

கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்களின் சொர்க்க பூமியான இங்கு, மீனவர் வலையில் சிக்கும் கடற்பசுக்கள் கடலில் பாதுகாப்பாக விடப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு அப்பால், பாறைகளில் மோதி காயமடைந்த கடற்பசுக்கள் இறந்த கரை ஒதுங்கியும் வருகின்றன.

இந்நிலையில் ராமேஸ்வரம் அருகே வில்லூண்டி தீர்த்தம் பகுதியில் அரிய வகை கடற்பசு இன்று(டிச.19) காலை கரை ஒதுங்கியது. இது குறித்து தகவலறிந்த மண்டபம் வனத்துறையினர் அங்கு விரைந்தனர். எட்டு வயது நிரம்பிய , சுமார் 250 கிலோ எடை கொண்ட ஆண் கடற்பசுவை மீட்டனர். கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பின் மிகவும் சுகாதாரமான முறையில் அந்த இடத்திலேயே புதைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

ஆழ்கடலில் வசித்து வரும் கடற்பசுக்கள் உற்சாக மிகுதியில் துள்ளி குதித்து உடல் மேலெழும்பும்போது பலத்த காற்றின் வேகத்தில் தள்ளப்பட்டு பாறைகளில் மோதுகின்றன. அவற்றில் படுகாயமடைந்து இறப்பவை, அழுகிய நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. இது தொடர்பாக இந்திய வன உயிரின நிறுவனம் மற்றும் கால்நடை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். 
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்