சேதுபாவாசத்திரம் சுற்றுப்பகுதியில் யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் காலதாமதமாக சம்பா சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில், யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

பேராவூரணி சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலை பயன்படுத்தி பாசன வசதி பெற்று வருகின்றது. மேலும் ஏரி, குளங்கள் மூலமும், ஆழ்துளை கிணறு மூலமும் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கல்லணை கால்வாய் மூலம் வரும் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். இந்த பகுதி விவசாயிகள் 60 சதவீதம் பேர் நேரடி விதைப்பு செய்துள்ளனர். நேரடி விதைப்பு செய்த பயிர்கள் 60 நாள் பயிராக உள்ளது. மீதமுள்ள 40 சதம் காலதாமதமாக கடந்த மாதம்தான் விவசாயிகள் சம்பா சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர். இந்த பயிர்கள் அனைத்தும் தற்போது உரம் இடும் தருவாயில் உள்ளது. அதே சமயம் யூரியா உரம் தட்டுப்பாடு உள்ளது. 

மேலும் நானோ யூரியா கரைசல் வாங்கினால் தான் யூரியா உரம் கொடுப்பதாகவும் உரக்கடை வியாபாரிகள் நிர்ப்பந்தம் செய்கின்றனர். மேலும், உர விலையை தங்கள் இஷ்டத்திற்கு உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் உர வினியோகம் செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் உரக்கடைகளை கண்காணிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்