முஸ்லிம், கிறிஸ்துவர்கள் பற்றிய சர்ச்சை கருத்து; சீமான் மீது வழக்குப்பதிவு...!

சா்ச்சைக்குாிய கருத்துகளை தொிவித்த நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது வைரலானது. அவர் பேசியது, "பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரிலிருந்து யாரும் நமக்கு ஓட்டு போடப் போவதில்லை. இங்கே இருக்கிற கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்லை. நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று, அது சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாட்டில் நடந்த அநீதி அக்கிரமத்துக்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய கிறித்துவ மக்கள் தான்" என்று பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு அலை கிளம்பியது.

சீமானின் இந்த பேச்சுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகளும் அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தன. ஆனால், சீமான் மீண்டும் மீண்டும் தனது கருத்தை தெரிவித்துக்கொண்டே இருந்தார். இஸ்லாமியர்களையும், கிறிஸ்துவர்களையும் சிறுபான்மையினர் என்று அழைத்தால் செருப்பால் அடிப்பேன் என அவர் கடுமையாக சாடினார். இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களிடம் தன்னுடைய பேச்சுக்காக மன்னிப்பு கேட்டால் அவர்கள் தனக்கு வாக்களிப்பார்களா என்று கேள்வி எழுப்பியது சர்ச்சைக்கு உள்ளானது.

தன்னை கண்டித்த மமக தலைவர் ஜவாஹிருல்லா, நடிகர் ராஜ்கிரண் போன்றோரையும் சீமான் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் சீமான் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிட நட்பு கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அவர் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்