தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள தென்னங்குடி கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் என்ற பெரிய ஏரி அமைந்துள்ளது. கல்லணை கால்வாயிலிருந்து பிரிந்து செல்லும் சேதுபாவாசத்திரம் என்ற பிரதான வாய்க்காலிலிருந்து 3 வாய்க்கால்களின் வழியாக பெரியகுளம் ஏரிக்குத் தண்ணீர் வருவது வழக்கம். பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இந்த வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு 40 வருடங்கள் ஆகிவிட்டன.
இதனால் வாய்க்கால்கள் பல இடங்களில் தூர்ந்து போனதுடன் வாய்கால்கள் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு மறைந்துவிட்டன. இந்த நிலையில், தென்னங்குடியில் உள்ள விவேகானந்தர் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த மூன்று வாய்க்கால்களைப் புதிதாக அமைத்து தூர்வாருவதற்கான முயற்சியை மேற்கொண்டனர். இதற்காக அப்பகுதியில் நீர் நிலைகளை மீட்கும் பணிகளைச் செய்து வரக்கூடிய கைபா என்ற கடைமடை விவசாயிகள் அமைப்பை தொடர்புகொண்டனர்.
இதையடுத்து 3 வாய்கால்களிலும் கைபாவின் உதவியுடன் தூர்வாருவதற்கான பணிகள் தொடங்கின. இந்த நிலையில், இரண்டு வாய்க்கால்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. வாய்க்கால் சென்றதற்கான எந்தச் சுவடும் இல்லை வாய்க்காலுக்கான இடமும் இல்லாமல் போய்விட்டது. இதனால் கைபா அமைப்பும் தென்னங்குடி இளைஞர்களும் என்ன செய்வதென புரியாமல் திகைத்தனர்.
இந்த நிலையில் பெரியகுளம் ஏரிக்கு தண்ணீர் வர வைப்பதற்காக போராடும் இளைஞர்களின் செயலை உணர்ந்த விவசாயிகள் வாய்க்கால்கள் அமைப்பதற்காக தங்களது விவசாய நிலத்திலிருந்து இடத்தைக் கொடுத்துள்ளனர். விவசாயிகளின் செயலால் நெகிழ்ந்த இளைஞர்கள் உடனடியாக வாய்க்கால் அமைக்கும் பணியைத் தொடங்கி செய்து முடித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்:
பெரியகுளம் ஏரிக்கு சேதுபாவசத்திரம் வாய்க்காலிருந்து பிரியும் 3 வாய்க்கால்கள் வழியாகத்தான் தண்ணீர் வந்து சேரும். அத்துடன் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறி மாவடு குறிச்சி கிழக்கு, ஆத்தாலூர், நாடாங்காடு, மாந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கும் தண்ணீர் சென்று அங்குள்ள நிலங்களும் பாசன வசதி பெறும். இந்த நிலையில், வாய்க்கால்களை தூர் வாருவதற்கு முயற்சி செய்தபோதுதான் இரண்டு வாய்க்கால்கள் இருந்த இடமோ, அது சென்றதற்கான தடமோ தெரியாத அளவுக்கு அழிந்துள்ளது தெரிந்தது.
இதையடுத்து, அந்த இரண்டு வாய்கால்களையும் புதிதாக அமைப்பதற்கு முயற்சி செய்தோம். 8 விவசாயிகள் இதற்காக 60 மீட்டரிலிருந்து 30 மீட்டர் வரை 3 அடி அகலத்துக்கு தங்களது விவசாய நிலத்தை தாமாக முன் வந்து வாய்க்கால்கள் அமைப்பதற்கு கொடுத்தனர். வைத்திலிங்கம் என்ற முன்னாள் ராணுவ வீரர் இதை முன்னின்று அக்கறையுடன் செய்தார்.
புதிதாக வாய்கால்கள் அமைக்கும் பணிகள் தற்போது முடிந்துவிட்டன. சில காரணங்களால் சேதுபாவாசத்திரம் வாய்க்கால்களுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. இதில் தண்ணீர் வந்துவிட்டால் மூன்று வாய்க்கால்களின் வழியாக வரும் தண்ணீரால் பெரியகுளம் ஏரி நிரம்பி விடும். அதன் மூலம் பயன்பெறும் இந்தப் பகுதியும் பசுமையாக மாறிவிடும்'' என்றனர்.
நிலம் கொடுத்த விவசாயிகள் தரப்பு :
பொதுவாக ஏரியில் தண்ணீர் இருந்தால் அந்தப் பகுதியே குளிர்ந்து காணப்படுவதுடன், விவசாயமும் செழிக்கும், வாழ்வாதாரம் பெருகும். பசுமைப் பகுதியாக வளம்பெற்ற பகுதியாக அந்த ஊர் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
ஏரிக்கு தண்ணீர் வர வைப்பதற்கான முயற்சியை எடுத்த இளைஞர்கள் செயல் எங்களுக்கும் வியப்பைத் தந்தது. இதில் நம்முடைய பங்கும் இருக்க வேண்டும், அவர்களின் ஆக்கபூர்வமான இந்தக் காரியத்துக்கு தோள் கொடுக்க வேண்டும் என நினைத்து எங்களது நிலத்தைக் கொடுத்துள்ளோம். இதனால் தற்போது எல்லோரது மனமும் குளிர்ந்துள்ளது. ஏரிக்கு தண்ணீர் வந்தடைந்த பிறகு அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் குளிரப்போகும் அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்" என்றனர் உற்சாகத்துடன்.
விகடன்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.