’நம்மை காக்கும் 48 திட்டம்’’- விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த சூப்பர் திட்டம்

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் "நம்மை காக்கும் 48" என்ற புதிய திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் நடத்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், தேர்தலில் அறிவித்த வாக்குறுகளை நிறைவேற்றி வருகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், சாலைப் பாதுகாப்பு குறித்தும், சாலை உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும், விபத்துக்களைக் குறைப்பதற்கும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், அதிக அளவு சாலை விபத்துகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும், சாலைகளின் வடிவமைப்பு குறித்தும், காவல்துறை உள்ளிட்ட பொதுமக்களுக்கு முதலுதவி பயிற்சி அளிப்பது, விபத்துகள் குறித்துச் சிறப்புச் சாலை சட்டங்கள் இயற்றுவது, புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்துவது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களைக் கண்டறிந்து. ஆய்வு செய்து, விபத்துகளைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

சாலை பாதுகாப்பு:
சாலைப் பாதுகாப்பு மக்கள் இயக்கமாக மாற பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள், விபத்தில் முதலுதவி செய்யும் பொதுமக்கள் அனைவருக்கும் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் "இன்னுயிர் காப்போம்-உதவி செய்" திட்டம் செயல்படும். இளைய தலைமுறையினருக்குச் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள சாலை விதிகள் குறித்த நெறிமுறைகளை மாணவர்களது அன்றாட நடைமுறையில் பிரதிபலிப்பதை உறுதி செய்வது முக்கியமான செயல்திட்டமாகும். சீரான சாலைகளும், நம்மைக் காக்கும் 48 மணி நேரமும். அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டமும், உதவி செய்வதுமே தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

நம்மை காக்கும் 48:
சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோர்களின் உயிரைக் காப்பாற்ற Gloden hours எனப்படும் முதல் சில மணி நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முக்கியமாகும். இருப்பினும், பல்வேறு காரணங்களால் விபத்தில் சிக்குவோருக்கு முதலில் சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. இதனிடையே சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் "நம்மை காக்கும் 48" என்ற புதிய திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும்.

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் வகையில், "நம்மை காக்கும் 48 - அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித் திட்டம்" செயல்படுத்தப்படும். சாலையோரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் இதற்கென கண்டறியப்பட்டுள்ளன. முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை இல்லாதவர்களுக்கும் பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என யாவருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவம் செய்யப்படும். உறுதியளிப்பு அடிப்படையில் செலவினங்கள் கணக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக ரூ 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு ரூ ஒரு லட்சம் வரம்புக்குள் 81 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ முறைகள் செயல்படுத்தப்பட உள்ளன. சேத குறைப்பு அடிப்படையில் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வகை செய்யப்பட்டுள்ளது. 12 மாத காலத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு அதன்பின் வருடாந்திர செலவினம் மதிப்பாய்வு செய்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்