ஹெலிகாப்டர் விபத்து : வதந்தி பரப்பினால் நடவடிக்கை - எச்சரிக்கை விடுத்த காவல் துறை

நீலகிரி, குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து, வெலிங்க்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் , அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் 12 பேர் உயர் ரக ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தனர். அப்போது குன்னூர் அருகே வானில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இந்திய முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

உண்மை நிலையை அறியாமல் தேவையில்லாத வதந்திகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம். வீண் யூகங்களை பரப்பி உயிரிழந்தவர்களின் மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தக்கூடாது. விசாரணை முடிந்து உண்மையான காரணம் வெளியிடப்படும் என இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் தற்போது தமிழக காவல்துறை தரப்பில், விமான விபத்து குறித்து பொய்யான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்