நெல்லை பள்ளி கட்டட விபத்து: உயிரிழந்த மாணவர்களின் விவரம் வெளியீடு

நெல்லையில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த மாணவர்களின் விபரங்களை, பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து தற்போது மாணவர்கள் நேரடியாக சென்று கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல மாணவர்கள் பள்ளிக்கு சென்று பயின்றனர். காலை 11 மணியளவில் இடைவேளை நேரம் வந்தது. அப்போது மாணவர்கள் கழிவறைக்கு செல்லத் தொடங்கினர். கழிவறையின் ஒரு பகுதிக்கு வெளியே மாணவர்கள் காத்து நின்றனர். அப்போது திடீரென கழிவறையின் தடுப்புச் சுவர் இடிந்து அங்கு நின்ற மாணவர்கள் மீது விழுந்தது. இதைப்பார்த்த சக மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றொரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 4 மாணவர்கள் காயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் இவ்விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் விபரங்களைப் பள்ளி நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. 9-ஆம் வகுப்பு மாணவர் அன்பழகன், 8ஆம் வகுப்பு மாணவர் விஷ்வ ரஞ்சன், 6ஆம் வகுப்பு மாணவர் சுதீஸ் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சய், இசக்கி பிரகாஸ், சேக் அபுபக்கர், அப்துல்லா ஆகிய 4 மாணவர்கள் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்