கோடை வெயில் அதிகரிப்பு - பள்ளி நேரங்களை காலை 7 மணிக்கு தொடங்கி மதியத்திற்குள் முடிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில் பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தல் செய்துள்ளது. வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி மதியத்திற்குள் நடத்தி முடிக்கலாம்  என கூறியுள்ளது. விளையாட்டு போன்ற நிகழ்வுகளை காலை நேரத்திலேயே முடிக்கவும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகலுக்குள் முடிக்கலாம் என கூறியுள்ளது. பள்ளியில் காலையில் நடத்தப்படும் வழிபாட்டை நிழலாக உள்ள இடத்தில் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. பள்ளி வாகனங்களில் அதிக அளவிற்கு மாணவர்களை ஏற்றக்கூடாது என்றும் அதில் முதலுதவி பெட்டி அவசியம் என்றும் கூறியுள்ளது. மேலும் முடிந்தளவு தங்கள் குழந்தைகளை பெற்றோர்களே அழைத்து வரலாம் என்று மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது. கடுமையான வெப்பம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பள்ளிகளுக்கு நடந்தோ அல்லது சைக்கிள் மூலமாகவோ வரும் மாணவர்கள் தங்கள் தலையை மூடிக்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும் எனவும் வகுப்பறைகளில் மின்விசிறி மற்றும் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பள்ளிகளில் ஆங்காங்கே சுத்தமான குடிநீர் வைக்கப்பட வேண்டும் என்றும், அந்த குடிநீர் மண் பானைகளிலோ அல்லது வாட்டர் கூலர் மூலமாகவோ குளிர்ந்த நீராக கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சீருடைகளை பொறுத்தவரை மாணவர்கள் கழுத்தில் அணியும் ‘டை’ உள்ளிட்டவற்றை அணிவதில் தளர்வுகள் வழங்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியுள்ளது. 

தமிழகத்தில்  1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு நேரத்தில் வந்தால் மட்டும் போதும் என கூறியுள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 14-ந் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) 13-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து மாணவர்கள் தேர்வு நாட்களில் மட்டும் வந்தால் போதும் எனவும் கூறியுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்