அரசு கேபிளில் கத்தார் உலகக்கோப்பை கால்பந்து - தமிழக அமைச்சரின் “குட் நியூஸ்”!

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடர் போட்டியை அரசு கேபிளில் இலவசமாக பார்க்க ஸ்போர்ட் 18 சேனலை கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பார்க்கலாம் என அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்து உள்ளார்.

உலகில் அதிக நாடுகளால் விளையாடப்படும் விளையாட்டாக கால்பந்து உள்ளது. அதே அதிக பணம் புழங்கும் விளையாட்டும் கால்பந்துதான். அந்த வகையில் பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதனை விளையாட்டு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு கண்டுகளிப்பார்கள். தற்போது 2022 பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் அரேபிய நாடான கத்தாரில் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது 32 அணிகளுக்கு இடையேயான குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு கடந்த 12 ஆண்டுகளில் 8 கால்பந்து மைதானங்கள், நெடுஞ்சாலைகள், நட்சத்திர விடுதிகள், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் சேவை, சுரங்க பாதைகள் என பல்வேறு உள்கட்டமைப்புகளை அமைத்து நாட்டையே மாற்றி இருக்கிறது கத்தார் அரசு. இதற்காக 220 பில்லியன் டாலர்களை அந்நாட்டு அரசு செலவிட்டு இருக்கிறது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரை இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்தை வியாகாம் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் 18 நிறுவனம் பெற்று இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் கால்பந்து தொடர்போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டென் ஸ்போர்ட்ஸை சப்ஸ்கிரைப் செய்து வைத்து இருக்கும் கேபிள் டிவி சந்தாதாரர்களால் உலகக்கோப்பை தொடரை கண்டுகளிக்க முடியவில்லை.

கேபிள்களிலும் டிடிஎச்களிலும் இந்த தொலைக்காட்சியை பார்க்க சிறப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் அரசு கேபிளை பயன்படுத்தி வரும் கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை தற்போது வெளியிட்டு இருக்கிறது தமிழ்நாடு அரசு. 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள தமிழ்நாடு தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், 'தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெற்று வரும் FIFA WORLD CUP 2022 கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்.' என்று பதிவிட்டு இருக்கிறார்.


-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்