கடல் பசுவைக் காப்பாற்றிய மந்திரிப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு ரொக்கப் பரிசு - சான்றிதழ் வழங்கிய வனத்துறை

அபூர்வ வகை உயிரினமான பாக் ஜலஜந்தி கடல் பகுதியில் வசிக்கக்கூடிய, மீனவர் வலையில் சிக்கிய ஆவுரியா எனப்படும் கடல் பசுவை உயிருடன் கடலில் விட்ட மீனவர்களுக்கு வனத்துறை சார்பில் ரொக்கப்பணம், சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  

தஞ்சாவூர் மாவட்டம், 
சேதுபாவாசத்திரம் அருகே செந்தலை அடுத்து உள்ள மந்திரிப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ஜனவரி 3ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மீனவர்கள் வலையில், ஆவுரியா எனப்படும் அபூர்வ வகை கடல்வாழ் உயிரினமான கடல் பசு சிக்கியது. இதையடுத்து, தங்கள் வலையை அறுத்து அந்த கடல் பசுவை மீண்டும் உயிருடன் கடலில் மீனவர்கள் விட்டனர்.

இந்நிலையில், மனோரா கடற்கரையில் தஞ்சை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி தலைமையில் மீனவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், "அபூர்வ வகை உயிரினங்களான கடல் பசுவை அனைவரும் பாதுகாக்க வேண்டும். கடல்வாழ் உயிரினங்களின் வாழுமிடமான கடற்பாசிகளை உருவாக்குவதில் அவுரியா முக்கிய இடம் வகிக்கிறது. கடல் பசு அரிய வகை கடல்வாழ் உயிரினங்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இவற்றை பிடிப்பது கூடாது. மீனவர்கள் வலையில் தவறுதலாக சிக்கினால், கடல்பசுவின் காயத்திற்கு முதலுதவி அளித்து கடலுக்குள் மீண்டும் விடும் வகையில் மீன்வளத்துறை, வனத்துறை சார்பில் மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்" என்றார்.

தொடர்ந்து, தமிழ்நாடு வனத்துறை சார்பில் மீனவர்கள் 11 பேருக்கு தலா 5, ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ், பதக்கம் சேதமடைந்த மீன் வலைக்காக ரூபாய் 25  ஆயிரம் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும், ஓம்கார் பவுண்டேஷன் சார்பில் ரூபாய் 10 ஆயிரமும், வைல்ட் லைஃப் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா சார்பில் ரூ. 10 ஆயிரம், என மொத்தம் ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார், ஓம்கார் பவுண்டேஷன் டாக்டர் பாலாஜி, வைல்ட் லைஃப் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா ஆய்வாளர்கள் டாக்டர் நேரு பிரபாகரன், ஸ்வேதா,  வனச்சரகர்கள் குமார் (பட்டுக்கோட்டை), ரஞ்சித் (தஞ்சாவூர்), வனவர் சிங்காரவேலு, கடலோர காவல்துறை உதவி ஆய்வாளர் நவநீதன், மீன்வளத்துறை ஆய்வாளர் கெங்கேஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஜலீலா பேகம் ஜின்னா (சரபேந்திரராஜன் பட்டினம்),
முரளி (திருவத்தேவன்), மற்றும் கிராமத்தலைவர்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்