ஜனவரி 4-ம் தேதி நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

2023 ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி தமிழ்நாட்டில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலகர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 18 வருடங்களாகவே போலியோ இல்லாத நிலைமை உள்ளது. இதற்கு காரணம் தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கிய காரணமாக உள்ளது. இனிவரும் காலங்களிலும் போலியோ பாதிப்பு குழந்தைகளுக்கு வராமல் பார்த்து கொள்ளும் அக்கறையில் அரசு ஈடுபட்டு வருகிறது.

இதற்காக ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நாளை 4ம் தேதி தமிழகம் முழுவதும்போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக  பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலகர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் தமிழகத்தில் 4-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.  சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 10 லட்சம் கர்ப்பிணிகளுக்கும் 9 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக 6வது வாரத்திலும், 14வது வாரத்திலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதை தவிர போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்தாலும் முன் எச்சரிக்கையாக பிறந்த குழந்தைகளுக்கு 9வது மாதம் முதல் 12 மாதங்களுக்குள் போலியோ சொட்டு மருந்து வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் தமிழகத்தில் 4ம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அலுவலர்கள் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்