பட்டுக்கோட்டையில் 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்த போலி மருத்துவர் கைது

பட்டுக்கோட்டையில் 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை கீழப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால் (வயது46). இவர் வடசேரி சாலை, பள்ளிவாசல் தெரு பகுதியில் உரிய அனுமதி இன்றி மருத்துவம் பார்த்து வந்ததாக புகார் வந்தது. இதுகுறித்து, தஞ்சை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திலகம் அறிவுறுத்தலின்படி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் சீனிவாசன் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில், காவல்துறை ஆய்வாளர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான காவல்துறையினர், பள்ளிவாசல் தெரு பகுதியில் செயல்பட்ட மருத்துவமனையை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் தனபால் மருந்துக்கடையில், ஆங்கில மருத்துவ உபகரணங்களைக் கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது. 

இதைத் தொடர்ந்து அவரிடம், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனபால் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்ததும், பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவமனையாக செயல்பட்டு வந்த இடத்துக்கு சீல் வைத்த காவல்துறையினர் தனபாலை கைது செய்தனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்