ராமேஸ்வரத்தில் திடீரென 200 மீட்டர் உள்வாங்கிய கடல் - தரைதட்டி நின்ற படகுகள்!

ராமேஸ்வரத்தில் திடீரென 200 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கரைகளில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் தரைதட்டியதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. கடல் பகுதியில் சூறாவளிக் காற்று வீசும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் நேற்று முதல் கடல் சீற்றம் இருந்துவருகிறது. வழக்கத்தை விட கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதோடு, மணிக்கு 55-65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளியும் வீசிவருகிறது.

இந்நிலையில், இன்று காலை ராமேஸ்வரத்தில் கடல் திடீரென 200 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால், கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான நாட்டுப்படகுகள், பைபர் படகுகள் தரை தட்டின. 200 மீட்டர் அளவுக்கு கடல் திடீரென உள்வாங்கியதால், கடலுக்கு இருக்கும் பவளப்பாறைகள், சிப்பிகள், பாசிகள் ஆகியவை மக்கள் பார்வைக்கு தெரிந்தன.

இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, இது போன்று காற்று வீசும் சீசனில் துறைமுக கடற்கரை, அக்னி தீர்த்த கடற்கரை, சங்குமால் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமாகவே கடல் நீர் உள்வாங்குவதும், மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புவதும் நடைபெறுவதுதான் என்றனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்