பட்டுக்கோட்டையில்.. ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்! அப்படி என்ன ஸ்பெஷல்?

தஞ்சாவூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நகராட்சியாக உள்ளது பட்டுக்கோட்டை. மிகப்பெரிய வர்த்தக நகராகவும், தஞ்சை, கடலோர பகுதி மக்களின் அறிவிக்கப்படாத மாவட்டத் தலைநகராகவும் தொழில் நகரமாகவும் இது உள்ளது. தினசரி கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் இங்கு நூற்றுக்கணக்கான மருத்துவமனைகள், ஜவுளி கடைகள், பல நகைக் கடைகள், சூப்பர்மார்க்கெட்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் அமைந்து உள்ளன. எனவே பல்வேறு தேவைகளுக்காக பட்டுக்கோட்டையை நாடி சுற்றி இருக்கும் அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, மதுக்கூர், மல்லிப்பட்டினம், பாப்பாநாடு, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டமான கட்டுமாவடி என பல ஊர்களில் இருந்து பேருந்துகளில் மக்கள் வருகிறார்கள்.

பட்டுக்கோட்டையில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கு ஏற்ற முறையான பேருந்து நிலையம் தற்போது பட்டுக்கோட்டையில் இல்லை. தற்போதைய பேருந்து நிலையம் அதிராம்பட்டினம் சாலையில் மிக முக்கிய பகுதியில் அமைந்து இருக்கிறது. 27 பேருந்து நிறுத்தங்களுடன் கூடிய "பி" வகுப்பு பேருந்து நிலையமான இது பட்டுக்கோட்டை நகரின் மைய பகுதியில் அமைந்து உள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான பேருந்துகள் நகருக்குள் சென்று வருகின்றன.

இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் ஏற்படுகின்றன. அதேபோன்று அதிகரித்து வரும் மக்கள் தொகை, பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தற்போதைய பேருந்து நிலையம் போதிய இடவசதிகளுடன் இல்லை. எனவே பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக மக்கள் முன்வைத்து வருகிறார்கள். ஆனால், பட்டுக்கோட்டையின் முக்கிய பகுதியில் அவ்வளவு பெரிய இடம் இல்லை. தற்போதைய பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தவும் அருகில் இடம் இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே பட்டுக்கோட்டையின் தற்போதைய பேருந்து நிலையத்தில் இருந்து 3.5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ள நரியம்பாளையம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 6.50 ஏக்கர் பரப்பளவில் பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு மேம்படுத்தப்பட்ட ஏ வகுப்பு பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.


அதன் அடிப்படையில் புதிய பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணியில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் என்னென்ன சிறப்புகள் உள்ளன என்பதை பார்ப்போம். 

பழைய பேருந்து நிலையத்தில் 27 பேருந்து நிறுத்துமிடங்கள் இருந்த நிலையில், இதில் 50 பேருந்து நிறுத்துமிடங்கள் அமைக்கப்படுகின்றன. அத்துடன் 120 கடைகள், 2 உணவகங்கள், 4 கழிவறைகள், 3 காத்திருப்பு அறைகள், 2 இருசக்கர வாகனம் நிறுத்துமிடங்கள், ஒரு 4 சக்கர வாகனம் நிறுத்துமிடம், பொருள் பாதுகாப்பு அறை, முன்பதிவு அலுவலகம் மற்றும் குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் பணிகள் நிறைவடைந்து வரும் ஜூன் மாதத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்