இன்று தொடங்கும் கனமழை... அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (17-12-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். அதன் காரணமாக இன்று (டிச.17) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் நாளை (டிச.18) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்டு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் (டிச.19) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கிடையே, இன்றும் நாளையும் வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், தரைக்காற்று அவ்வப்போது மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்றும், நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேநேரம், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்